Friday, December 5, 2025

துபாய்-ஹைதராபாத் எமிரேட்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர தரையிறக்கம்

துபாய்-ஹைதராபாத் எமிரேட்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர தரையிறக்கம்



ஹைதராபாத்: துபாய்-ஹைதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.


துபாயில் இருந்து ஹைதராபாத்துக்கு EK 526 என்ற எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக விமான நிறுவனத்திற்கு ஒரு இ மெயில் வந்தது.

மிரட்டலை அடுத்து, விமான நிலைய பாதுகாப்பு குழுவினர் உடனடியாக செயலில் இறங்கினர். ஹைதராபாத் விமான நிலையத்தில் மிகவும் பாதுகாப்புடன் விமானம் இறக்கப்பட்டது. அதன் பின்னர், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கினர்.

அனைத்து பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் தனிமைப்படுத்தினர். தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

பல மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் எவ்வித வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

நேற்றைய தினம், மதீனா-ஹைதராபாத் விமானத்துக்கு இருமுறை இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக, அந்த விமானத்தை அதிகாரிகள் குழுவினர், ஆமதாபாத்திற்கு திருப்பி விட்டனர். 

Thursday, December 4, 2025

ரூ.50 ஆயிரம் லஞ்சம்: காரியாபட்டி பேரூராட்சி இளநிலை பொறியாளர் கைது

ரூ.50 ஆயிரம் லஞ்சம்: காரியாபட்டி பேரூராட்சி இளநிலை பொறியாளர் கைது

 


காரியாபட்டி : ஒப்பந்த பணிக்கான தொகையை கொடுக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காரியாபட்டி பேரூராட்சி இளநிலை பொறியாளர் கணேசன், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


மதுரை செல்லூரைச் சேர்ந்த முதல் நிலை ஒப்பந்ததாரர் பழனிக்குமார் 42. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் 3 ஆண்டுகளுக்கு முன் ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் மின் மயானம் ஒப்பந்தம் எடுத்து பணி செய்தார். இதற்கு ரூ. 1 கோடியே 14 லட்சத்து 48 ஆயிரத்து 160 தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகையை வழங்க கேட்டு பேரூராட்சி அலுவலகத்திற்கு நடையாய் நடந்தார். ஆனால் மீதித் தொகையை கொடுக்காமல் காலதாமதம் செய்தனர். மீதத்தொகையை விடுவிக்க ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என இளநிலை பொறியாளர் கணேசன் கேட்டார்.

இதனை கொடுக்க மனமில்லாத பழனிக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசாரின் அறிவுரைப்படி பணம் தர ஒப்புக்கொண்டார். இதையடுத்து இன்று(டிச.,04) காலை 10 மணிக்கு, அலுவலகத்தில் இருந்த கணேசனிடம் முன் பணமாக ரூ. 50 ஆயித்தை கொடுத்தார். மறைந்திருந்து ஏ.டி.எஸ்.பி .,ராமச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ஜாஸ்மின் மும்தாஜ் , பூமிநாதன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக கணேசனை கைது செய்தனர். பணத்தை கைப்பற்றி, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tuesday, December 2, 2025

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல்

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல்

 


சென்னை: கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்துக்கு வந்தோரில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நியமித்தது. பின்னர், சென்னை ஐகோர்ட் சிறப்பு குழு அமைத்து உத்தரவிட்டது. தவெக தரப்பு சுப்ரீம்கோர்ட்டினை அணுகி, சிபிஐ விசாரணை நடத்த கோரியிருந்தது. பின்னர் சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.



தற்போது சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.மனுவில் தமிழக அரசு கூறியிருப்பதாவது: கரூர் கொடுந்துயரம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும்.



அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை மீண்டும் நடத்தும் வகையில் உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.