Tuesday, January 6, 2026

கரூர் நெரிசல் சம்பவம்: ஜன.,12ல் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்

கரூர் நெரிசல் சம்பவம்: ஜன.,12ல் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்

 


சென்னை: கரூர் நெரிசல் சம்பவம் வழக்கில், தவெக தலைவர் விஜய் ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.


கடந்த செப்., 27ல், கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கரூர் கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., ஜோஷ் தங்கையா, கூடுதல் எஸ்.பி., பிரேமானந்தன், டி.எஸ்.பி., செல்வராஜ், கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோரை, டில்லிக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.



அதேபோல, த.வெ.க., முன்னணி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலர் மதியழகன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். இரு தரப்பினரிடமும் தனித்தனியாக ஒன்பது மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அப்போது, கரூர் சம்பவத்தில், 41பேர் உயிரிழந்தற்கான காரணங்கள் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தவெக நிர்வாகிகள் குற்றம் சுமத்தி இருந்தனர்.



இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையாக, தவெக தலைவர் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. வரும் ஜனவரி 12ம் தேதி விஜய் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிபிஐ அதிகாரிகள் சம்மனில் குறிப்பிட்டு உள்ளனர்.

Saturday, January 3, 2026

வெனிசுலா அதிபர் மதுரோ நாடு கடத்தப்பட்டார்: டிரம்ப் அறிவிப்பு

வெனிசுலா அதிபர் மதுரோ நாடு கடத்தப்பட்டார்: டிரம்ப் அறிவிப்பு

 


கராகஸ்: வெனிசுலா தலைநகர் கராகஸ்சில் அமெரிக்க விமானப்படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்நாட்டு அதிபர் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதாகவும் நாடு கடத்தப்பட்டு விட்டதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.



நீண்ட கால பகை

அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. அந்நாடு மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. வெனிசுலா ஆட்சியாளர்கள் மீது, அதிபர் டிரம்ப் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.




இந்நிலையில், சில மாதம் முன், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வெனிசுலா கப்பல்களும் தாக்குதலுக்கு ஆளாகின. வெனிசுலா போதை கடத்தல் மையமாக இருப்பதாக டிரம்ப் கூறிய குற்றச்சாட்டை அந்த நாடு திட்டவட்டமாக மறுத்தது.



தாக்குதல்

இந்த சூழலில் இன்று திடீரென வெனிசுலா தலைநகர் கராகஸ்சில் அமெரிக்க விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் குண்டு வீசி தாக்குதலை தொடங்கின. ராணுவ தளங்கள், பாதுகாப்புத்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாக்குதலுக்கு இலக்காகின.